மொழியியல் ஆய்வுகளும் தரவகமும் (Language Research and Corpus)
Keywords:
தரவு, தரவகம், தரவக மொழியியல், கணினி மொழியியல், பகுப்பாய்வு.Abstract
ஆய்வுச் சுருக்கம்
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியானது, மொழி கற்றல் -கற்பித்தலில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. மொழியியல் துறையில் தரவக மொழியியலும் கணினி மொழியியலும் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளன. இத்துறைகளின் வழி மொழியியல் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றாலும்கூட, பல்வேறு ஆய்வுச் சிக்கல்களுக்கும் ஆய்வு வினாக்களுக்கும் துல்லியமான விடைகளைப் பெற மொழியியல் அடிப்படையில் தரவுகளின் பகுப்பாய்வு தேவைப்படுகிறது. இத்தகைய வினாக்களுக்குப் பதிலளிக்க ஆய்வாளர்கள் தரவக மொழியியலையும் தகவல் தொழில்நுட்பத்தையும் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். தரவக மொழியியல் என்பது ஒரு மொழியில் காணப்படும் நுணுக்கமான கூறுகளையும் இதுவரை கண்டறியப்படாத மொழியியல் கூறுகளையும், மிகப்பெரிய தரவினை ஆய்வதன் வழி கண்டுபிடித்துச் சொல்லக்கூடிய ஒரு துறையாகும். ஒரு மொழிக்கான தரவகத்தை அறிவியல் அடிப்படையில் உருவாக்கவும் உருவாக்கப்பட்ட தரவகத்தை முறையான மொழியியல் ஆய்வு வழிமுறைகளைப் பின்பற்றி ஆய்வுசெய்யவும் தேவையான அறிவைத் தரவக மொழியியல் அளிக்கிறது. தகவல் தொழில்நுட்பம், கணினியியல் ஆகிய துறைகளின் இன்றைய மிகப் பெரும் வளர்ச்சியானது, தரவக மொழியியல் துறையானது நல்லதொரு உயர்நிலையை அடைவதற்கு இன்று உதவுகிறது. தரவகமொழியியல் துறையின் இன்றைய வளர்ச்சியானது, தகவல் தொழில் நுட்பத்தின் உதவியுடன் மொழியியல் ஆராய்ச்சியாளர்களும், மொழிக் கல்வியாளர்களும், கற்பவர்களும், தங்களுக்குத் தேவையான ஆற்றலையும் வாய்ப்புக்களையும் பெற்றுக்கொள்ள மிகவும் உதவுகிறது. மலேசியா போன்ற பன்மொழிச் சூழல் நிறைந்த நாட்டில் தாய்மொழியை முதன் மொழியாகவோ இரண்டாம் மொழியாகவோ கற்பிப்பதற்கும் கற்பதற்கும் இத்தகைய ஆய்வுகள் பெரிதும் துணைப்புரியும். மேலும் ஒரு மொழியின் சொற்களஞ்சியம், இலக்கணம் ஆகியவற்றின் இன்றைய கட்ட வளர்ச்சியைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளத் தரவக மொழியியல் துறை மிகவும் உதவும்.