ஒளவையாரும், வள்ளுவரும் வலியுறுத்தும் நீதிக்கருத்துக்கள் : திருக்குறள் மற்றும் ஆத்திசூடியை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஒப்பாய்வு (Justice Concepts Prescribed by Awwaiyaar and Valluvar: A Comparative Review on Thirukkural and Attisudi)
Keywords:
ஆத்திசூடி, திருக்குறள், நீதிக்கருத்துக்கள், ஒப்பாய்வு, இலக்கியம்.Abstract
ஆய்வுச்சுருக்கம்
ஒப்பாய்வு என்பது வெவ்வேறு இலக்கியப்படைப்புக்களை அருகருகே வைத்து ஒப்பு நோக்கும் ஆய்வுமுறையாகும். சோழர்காலச் சமூகத் தேவையின் பொருட்டு சமூக நீதியைப் பறைசாற்ற எழுந்த இலக்கியமே ஒளவையாரின் ஆத்திசூடி ஆகும். இதைப்போலவே சங்கமருவியகாலச் சீரழிந்த சமூகத்தினை அறத்தினால் மாற்றவேண்டிய தேவை ஏற்பட்ட வேளையில் திருக்குறள் வள்ளுவரால் படைக்கப்பட்டது. இதனைக் கண்ணுற்றே இவ்விரு இலக்கியங்களிலும் பேசப்பட்ட நீதிக்கருத்துக்களினை ஒப்பாய்வுக் கண்ணோட்டத்தில் ஆராய்ந்து காட்சிப்படுத்த இவ்வாய்வு முனைந்துள்ளது. மானுடவாழ்விற்கு அவசியமான நீதிசார் போதனைக்கருத்துக்கள் ஒளவையாரின் ஆத்திசூடியிலும், வள்ளுவரின் திருக்குறளிலும் எவ்விதம் பயிலப்பட்டு வந்துள்ளன என்பதனை வலியுறுத்தி, அவற்றினை எதிர்காலச் சந்ததிக்கு ஆவணப்படுத்துவதே இவ்வாய்வின் நோக்காகும். இவ்வாய்வானது பண்புசார் முறை, விபரணப் பகுப்பாய்வு முறை ஆகிய அணுகுமுறைகளைப் பயன்படுத்தி ஒப்பாய்வு நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்விற்கு ஆத்திசூடி மற்றும் திருக்குறள் முதலியவை முதன்மைத் தரவுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், அவை சார்ந்த கட்டுரை நூல்கள், இதழ்கள், மின்னூடகக் கருத்துக்கள் முதலியவையும் ஆய்வுத்தரவுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்விலக்கியங்களில் உள்ள உயர் நீதிக்கருத்துக்கள் சமூகத்தில் நிலைபெற்று, சமாதானமிகு வாழ்வு மேம்பாடடைய இது சார்ந்த மேலும் பல ஆய்வுகள் ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதனையும் இவ்வாய்வு வலியுறுத்துகின்றது.