அரபு, தமிழ் மொழிகளில் காணப்படும் ஆகுபெயர்: ஓர் ஒப்பீட்டாய்வு (The Trope Between Arabic and Tamil Languages: A Contrastive Study)
Keywords:
ஆகுபெயர், மஜாஸ், மாற்றுப் பொருள், இடைத்தொடர்பு, தமிழ் இலக்கணம்Abstract
ஆய்வுச் சுருக்கம்
திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தமிழ் மற்றும் செமித்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த அரபு ஆகிய மொழிகளில் காணப்படும் ஆகுபெயர் இலக்கண விதிகளை இவ்வாய்வு ஒப்பிட்டு ஆராய்கின்றது. ஆகு பெயர் எனப்படுவது ஒன்றினது இயற்பெயர் அதனோடு தொடர்புடைய வேறொன்றுக்கு ஆகிவருவதாகும். இக்கருத்தியலை அரபு மொழியானது மஜாஸ் என்ற பிரயோகத்தால் அறிமுகப்படுத்துகின்றது. இவ்விரு மொழிகளிலும் காணப்படும் ஆகுபெயரை ஒப்பிட்டு அவற்றுக்கிடையிலான ஒற்றுமை வேற்றுமைகளைக் கண்டறிந்துள்ளது என்ற வகையில், இந்த ஆய்வானது குறித்த தலைப்பு ரீதியாக காணப்படும் ஆய்வுப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்துள்ளது. அரபு மொழியில் மஜாஸ் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள வரைவிலக்கணத்தில் குறித்த ஒரு சொல், இடைத்தொடர்பு மற்றும் குறிகாட்டிகள் ஆகிய மூன்று பிரதான அம்சங்களிலும் முதலிரண்டினையும் வெளிப்படையாக தமிழ் மொழியும் கையாண்டுள்ள போதிலும், குறிகாட்டிகள் என்ற அலகானது வெளிப்படையாக கலந்துரையாடப்படாத போதிலும் உதாரணங்களில் அதன் பிரயோகமானது அமைந்துள்ளமையும் பிறிதொரு கண்டறிதலாகும். அத்துடன் ஒரு குறித்த சொல்ல மாற்றுப் பொருள் கொள்ளும் செயன் முறை இரு மொழிகளுக்கும் பொதுவான ஒர் அம்சமாக அமைந்துள்ள அதேவேளை, அரபு மொழியானது தனிஅலகாக விவாதிக்கின்ற குறித்த வினையின் எழுவாயைத் தவிர்த்து வேறு ஒருவரை எழுவாயாக சித்தரிக்கும் செயன்முறை தமிழ் மொழியில் தனி விதியாக பேசப்படாத போதிலும் அதன் உதாரணங்களில் பரவலாக இழையோடியிருப்பதையும் கண்டு கொள்ள முடிந்தது. இரு மொழிகளும் தமக்கேயுரிய தனித்துவமான சில வகைப்பாடுகளைக் கொண்டிருந்த போதிலும், பிரதான வகைப்பாடுகளில் இரு மொழிகளுக்கிடையில் ஒத்த தன்மையை அடையாளப்படுத்த முடிந்தது. மூல மொழி கருத்தியல்களை முறையாக அறிந்து கொள்வதன் மூலமே இலக்கு மொழி கருத்தியல்களை இலகுவாக புரிந்து கொள்ள முடியும் என்ற வகையில் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டுஇ இலக்கு மொழியாக அரபு மொழியைக் கற்பவர்களுக்கு இந்த ஆய்வு பயன்மிக்கதாக அமையும் என்பது ஆய்வாளர்களது எதிர்பார்ப்பாகும்.