வேதங்களில் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய தொன்மங்கள் (Myths related to Cosmogony Revealed in Vedas)
Keywords:
தொன்மம் , பிரபஞ்சவியல், வேதங்கள், பிரபஞ்ச சாகரம், உறைவுக் கருத்தாக்கம்Abstract
ஆய்வுச் சுருக்கம்
பிரபஞ்சத்தின் உருவாக்கம் குறித்த மெய்யியல் விசாரணைகள் மற்றும்அறிவியல் ஆய்வுகளுக்கு முன்னோடியாய் அமைந்தவை பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்துப் பண்டைய நாகரிகங்களில் கட்டமைக்கப்பட்டிருந்த தொன்மங்களாகும். தொன்மங்களை வெறுமனே ஐதீகங்களாக மட்டும் கருதலாகாது. அவை குறித்த சமூகத்தின் கூட்டுநனவிலியின் பேறாகும். புராதன எகிப்திய, பபிலோனிய, கிரேக்க, சீன, ஹீப்று நாகரிகங்கள் யாவற்றிலும் பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்துச் சுவாரசியமான தொன்மங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. அதுபோன்றே உலகின் தொன்மையான இலக்கிய மூலங்களாகக் கருதப்படும் வேத இலக்கியங்களிலும் பிரபஞ்சத்தின் உருவாக்கம் குறித்த தொன்மங்கள் பயின்று வந்துள்ளன. சமுத்திரத்தின் “திரள்தல்”,“கலங்கல்” பற்றிய தொன்மம், மண்டன முட்டைத் தொன்மம்,ஆதிமலைத்தொன்மம், வராகத்தொன்மம், ஹிரண்யகர்ப்பன் போன்றவை இவ்வகையில் குறிப்பிடற்பாலன. வேத இலக்கியங்களில் வித்தூன்றப்பெற்ற பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த இத்தகைய கருத்துநிலைகளே பிற்காலத்தில் இதிகாச பௌராணிக இலக்கியங்களில் விரிவாக்கம் பெற்றன. “பாற்கடல்” கடைதல், மகாமேருமலை, நாவலந்தீவு, விஷ்ணுவின் வராக அவதாரம் முதலியவை இவ்வகையில் சுட்டத்தக்கன. ரிக்வேதத்தில் இடம்பெற்றுள்ள “படைப்புப் பற்றிய பாடலும்” இவ்வகையில் மிகுந்த முக்கியத்துவத்தினை உடையதாகும். உலகின் ஆதிநாகரிகங்களில் பிரபஞ்சத்தின் உருவாக்கம் குறித்து நிலவுகின்ற தொன்மங்களின் கருத்தியல்களுக்கும் வேதகாலத் தொன்மங்களுக்குமிடையில் சில பொதுத்தன்மைகளும் உண்டு. அதேவேளை ஏனைய நாகரிகத் தொன்மங்களுக்கில்லாத சில சிறப்பியல்புகளும் வேதகாலத் தொன்மங்களுக்குண்டு.