சும்மா இருப்பதே சுகம் (The Pleasure of Being Idle)
Keywords:
சும்மா, சித்தர்கள், பரிபாஷை, தத்துவம், மனம்Abstract
ஆய்வுச் சுருக்கம்
தமிழ் மொழி இலக்கணத்தில் மட்டுமல்லாமல் சொற்களஞ்சியங்களிலும் வளமான மொழியாக விளங்குகிறது. நீண்டு நெடிய பாரம்பரியத்தை உடைய தமிழ் மொழியில் உள்ள சொற்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பொருளைத் தருவனவாக அமைந்துள்ளன. அதே வேளையில் ஒன்றைக் குறிப்பிடும் போது அதன் தன்மைக்கு ஏற்ப அதற்குப் பொருத்தமான வெவ்வேறு சொற்களையும் தமிழில் பயன்படுத்தலாம். இதை எல்லாம் கடந்து பரிபாஷை அல்லது மறை மொழியாகவும் தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. மறைமொழி என்பது ஒரு பொருளுக்கான அர்த்தத்தை நேரடியாகக் கூறாமல், மறைமுகமாகக் கூறுதல் என்பதாகும். இந்த இடத்தில் பயன்பாட்டில் இருக்கும் சொல்லானது அதன் நேரடி அர்த்தத்தையும் கடந்து வேறு சில அர்த்தங்களை மிகச் சூட்சுமமாக வழங்கும். இவ்வாறு தமிழில் மிகவும் தனிச்சிறப்புடைய சொற்களில் ஒன்றுதான் “சும்மா” எனும் வார்த்தை. இந்தச் சொல் மக்கள் மத்தில் மிகப் பிரசித்தி பெற்றது. பல சூழல்களில் மக்கள் இந்தச் சொல்லின் ஆழ்ந்த பொருளைத் தெரிந்தோ தெரியாமலோ கூடப் பயன்படுத்துவதுண்டு. ஆனால் இந்தச் சொல்லானது பேச்சு வழக்கில் மக்கள் மனதோடு இயைந்த வார்த்தை. மிக ஜனரஞ்சகமான சொல்லாகச் “சும்மா” எனும் சொல் பயன்படுத்தப்பட்ட போதிலும் இதன் உட்பொருள் மிகவும் ஆழ்ந்த சிந்தனைக்குறியது. சித்தர்களின் தத்துவத்தில் இச்சொல்லானது ஒரு தாரக மந்திரமாகவே அறியப்படுகிறது. மேலும் மனிதன் தன்னைத் தான் அறியவும், தன்னுள் உறைந்துள்ள பேராற்றலைக் கண்டறியவும் சும்மா இருப்பதே சிறந்த வழி என்பது சித்தர்கள் கண்ட பேருண்மை. இந்தச் சொல்லின் பொருண்மையை ஆராய்ந்து அதன் தனிச்சிறப்புகளை முன்வைப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.