தொல்லியல் நோக்கில் நாகப்பட்டின பௌத்தம் An Archaeological Study of Buddhism in Nagapattinam

Authors

  • S. Tamil Sankar Department of Tamil, School of Languages Literature & Culture, Visva- Bharati Central University, Santiniketan, west Bengal, India

Keywords:

கல்வெட்டு, யுவான் சுவாங், காவிரிப்பூம்பட்டிணம், பௌத்த விகாரம், புத்த பள்ளி, பாலி மொழியில் இரசவாகினி.

Abstract

கட்டுரைச் சுருக்கம்

பௌத்த சமயம் தமிழ்நாட்டிற்கு முதன் முதலில் எப்போது வந்தது என்கின்ற தகவல் தமிழ் நூல்களில் காணப்படவில்லை. ஆயினும் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பௌத்த சமயம் தமிழ்நாட்டிற்கு வந்ததை அசோகரின் பிஷாவர் கல்வெட்டின் மூலம் அறியலாம். மேலும் சமணர்கள் மேற்குக் கடற்கரையின் வழியாகவும், பௌத்தர்கள் கிழக்குக் கடற்கரையின் வழியாகவும் தங்களின் ஆதிக்கத்தைத் தென்னகத்தில் பரப்பினர். அசோக மன்னரின் ஐந்தாவது கல்வெட்டில் சோழ நாட்டில் அமைந்துள்ள நாகப்பட்டினத்தில் அசோகர் பெளத்த விகாரங்களைக் கட்டியதாகக் குறிப்பு காணப்படுகிறது. அதை மெய்ப்பிக்கும் வகையில் சீனப்பயணி யுவான்சாங் கி.பி. 629- 645-இல் தன் பயணக் குறிப்பேட்டில், அசோகர் கட்டியதாக குறிப்பிடும் பௌத்த விகாரை நாகப்பட்டினத்தில் கண்டதாகக் குறிப்பிடுகிறார். சோழர் காலத்தில் கடல்கோலால் காவிரிப்பூம்பட்டினம் அழிந்த பிறகு, அந்நகரத்தின் பழமையான அமைப்பைப் போன்றே நாகப்பட்டினம் மீண்டும் பிற்காலச் சோழர்களால் உருவாக்கப்பட்டது. கீழ்த்திசை நாடுகளுக்கு வணிக மையமாகவும், பெளத்த சமயம் பரப்புவதற்கு ஒரு முக்கியமான இடமாகவும் நாகப்பட்டினம் திகழ்ந்தது. இராஜராஜ சோழனின் ஆட்சி காலத்தில் கடாரத்தரசன் ஸ்ரீமாறவிஜயதுங்கவர்மன் தன் தந்தையின் நினைவாக நாகப்பட்டினத்தில் சூடாமணி என்ற விகாரைக் கட்டினான். இந்த விகாரம் ராசராஜ பெரும்பள்ளி என்றும் அழைக்கப்படுகிறது. இராஜராஜன் இவ்விகாருக்கு ஆனைமங்கலம் என்ற ஊரைக் கொடையாக வழங்கினான் என்பதை ஆனைமங்கலம் செப்பேடு குறிப்பிடுகிறது.

1965-ஆம் ஆண்டு காவிரிபூம்பட்டினத்திற்கு அருகே உள்ள பல்லவனேஸ்வரம் என்ற இடத்தில் செய்யப்பட்ட அகழாய்வில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த முழுமையான பௌத்த விகாரம் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றுடன் தியான நிலையில் உள்ள புத்தர் சிலையும், பெண் தெய்வ சுடுமண் உருவங்கலும், ஒரு பசுவின் எலும்பும், சுண்ணாம்புக்கல்லால் ஆன புத்தரின் பாதமும் கிடைத்துள்ளன. கி.பி. நான்காம் நூற்றாண்டில் புத்ததத்தன் என்பவன் பாலி மொழியில் எழுதிய அபிதம்மாவதாரம், விநயவிச்சயம் ஆகிய இரு நூல்களைக் காவிரிபூம்பட்டினத்தில் கணதாசனால் அமைக்கபட்டிருந்த பெளத்தப் பள்ளியில் வெளியிட்டான் என்று மயிலை சீனி வேங்கடசாமி குறிப்பிடுகிறார். மேலும் நாகப்பட்டினம் மற்றும் பூம்புகாரில் பல பெளத்த விகாரங்கள் இருந்துள்ளன என்பதைப் பாலி மொழியில் உள்ள 'இராசவாகினி' என்னும் பெளத்த நூல் குறிப்பிடுகிறது. ஆகவே நாகப்பட்டினம் அசோகப் பேரரசில் தொடங்கி சோழப் பேரரசு வரை பெளத்த தலமாக விளங்கியதைத் தொல்லியல் நோக்கில் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Downloads

Download data is not yet available.

Downloads

Published

2022-01-02

Issue

Section

Articles