தேன்கூடு கவிதைத் தொகுப்புச் சித்தரிக்கும் பல்லினச்சூழல்: தாக்கக் கோட்பாட்டின்வழி ஓர் ஆய்வு
Multiculturalism as depicted in Theenkoodu Poetry Collection: A Study of Influence Theory
Keywords:
தாக்கக்கோட்பாடு, மலேசியா, பல்லினச்சூழல், தேன்கூடு கவிதைத் தொகுப்புAbstract
ஆய்வுச் சுருக்கம்
மரபு கவிதை உலகில் தனக்கென ஓரிடத்தை நிலை நிறுத்திக்கொண்டவர் சீனி நைனா முகம்மது. இவர் தாம்வாழும் சமூகத்தை உற்று நோக்கிய ஒரு படைப்பாளியாவார். 1958 முதல் 2011ஆம் ஆண்டு வரை இவர் எழுதிய 200க்கும் மேற்பட்ட மரபு கவிதைகள் அடங்கிய “தேன்கூடு” எனும் கவிதைத் தொகுப்பு நூல் 2011ஆம் ஆண்டு வெளியீடு கண்டது. இக்கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகளில் மலேசிய நாட்டின் பல்லினச்சூழல் காணப்படுகின்றது. இச்சூழல், மொழி, பண்பாடு, ஆட்சி என்று ஓர் விரிந்த பார்வை கொண்டுள்ளது. ஓர் இலக்கியம் அதன் அடிக்கருத்து, உத்தி, யாப்பமைப்பு, புனைவுநிலை ஆகியவற்றில் அதற்கு முன்பு தோன்றிய மற்றொரு இலக்கியத்துடன் ஏதேனும் ஒரு வகையில் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும். இவ்வாறாகத் தனக்கு முந்தைய இலக்கியங்களில் தொடர்பில்லாமல் முற்றிலும் புதிதாகப் படைக்கப்படுகின்ற ஓர் இலக்கியத்தை அம்மொழியின் இலக்கிய மரபுகள் ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்துவிடுகின்றன என்பது ஒப்பிலக்கிய ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளன. ஒப்பிலக்கிய ஆய்வில் ஒரு பகுதியாக விளங்கும் ‘தாக்கக்கோட்பாடு’ (Influence Theory) எனும் கோட்பாட்டின் அடிப்படையில், தற்காலத் தமிழிலக்கியமான “தேன்கூடு” கவிதைத் தொகுப்பில் மலேசியர்களின் பல்லினச் சூழலை, தூண்டல்நிலை, பிறமொழித்தாக்கம் எனும் வழியில் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.