சித்தர் சூஃபி இலக்கியங்களில் சமயம் கடந்த சமரசப் பண்பு
Harmony Beyond Religion in Siddhar and Sufi Literatures
Keywords:
சித்தர் இல்க்கியம், சூஃபி இலக்கியம், குரு, சமயம் கடந்த சமரசப் பண்பு, சித்தர் தத்துவம்Abstract
ஆய்வுச் சுருக்கம்
இக்கட்டுரை சித்தர் தத்துவத்தையும் சூஃபி தத்துவத்தையும் ஒப்பீட்டு முறையில் ஆராய்கின்றது. இவ்விரு தத்துவங்களையும் இவ்வாறு ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது அவற்றுக்கிடையே பல ஒற்றுமை வேற்றுமைகள் இருப்பது தெரிய வருகின்றது. அவ்வொற்றுமை வேற்றுமைகளை இனங்கண்டு விளக்கப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இந்த ஆய்வுக்கு நூலகத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்ச் சித்தர்கள் பாடிவைத்த பாடல்கள் சித்தர் இலக்கியம் என அழைக்கப்படுகின்றன. தென் இந்தியாவிலுள்ள தமிழ் முஸ்லீம்களாகிய சூஃபி மெய்ஞ்ஞானிகள் பாடிய பாடல்கள் சூஃபி மெய்ஞ்ஞான இலக்கியம் என்றழைக்கப்படுகின்றன. இந்த ஆய்வின் வழி சில கருத்துமுடிபுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் தமிழ் பேசும் மக்களிடையே பல சூஃபி ஞானியர் தோன்றி உள்ளனர். தமிழ் மொழியில் பாடப்பட்டுள்ள அவர்களது பாடல்களில், தமிழ்ச் சித்தர்களின் பாடல்களில் காணப் பெறுகின்ற கருத்துகள் பரவலாகக் காணப்படுகின்றன. சித்தர்களும் சூஃபிகளும் மெய்ஞ்ஞானம் பெறுவது ஒன்றையே தங்கள் வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்டு வாழ்ந்தவர்கள். எனவேதான் சூஃபிகளின் பாடல்களில் இயல்பாகவே சித்தர்களின் தாக்கம் வந்து அமைந்து விடுகின்றது. அதுமட்டும் அல்லாமல் தமிழ் நாட்டில் வாழ்ந்த சூஃபிகளின் காலத்துக்கு முன்பே சித்தர் பாடல்கள் மக்களிடையே புழக்கத்தில் இருந்தன. மெய்ஞ்ஞானத் தேடலில் ஈடுபட்டிருந்த சூஃபிகள் இச்சித்தர்ப் பாடல்களில் ஆழ்ந்ததன் காரணமாக சித்தர் தாக்கம் சூஃபிகளின் பாடல்களில் வெளிப்பட்டிருக்கின்றன. எவ்வாறாயினும் இம்மெய்ஞ்ஞானியர்களின் வரவால் தமிழகத்து இந்துக்களும் முஸ்லீம்களும் மெய்ஞ்ஞானத் தேடலின் பக்கம் தங்களது பார்வையைத் திருப்பவும், சாதி சமய பேதமின்றி வாழவும், சித்த மருத்துவ முறைகளைப் பரவலாக அறிந்திருக்கவும், நல்ல ஆன்மீகத் தமிழ் இலக்கியங்களைப் பெற்றிருக்கவும், சிறந்த தியான வழிபாட்டுத் தலங்களைக் கொண்டிருக்கவும் வழி ஏற்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் மட்டும் அல்லாமல் உலக நாடுகள் பலவற்றில் வாழும் தமிழர்களிடையே மெய்ஞ்ஞானச் சிந்தனைகள் வேர் விடுவதற்கு சித்தர்களும் சூஃபிகளும் விட்டுச் சென்றுள்ள மெய்ஞ்ஞான இலக்கியங்கள் பெரும்பங்காற்றி வருகின்றன.