பெரிய புராணம் உணர்த்தும் குரு, லிங்க, சங்கம வழிபாட்டில் திருமந்திரம் காட்டும் சான்றுகள் (The Importants of Guru, Linga, Sangama Worship in Periya Puranam Evidences Derived From Tirumantiram)
DOI:
https://doi.org/10.22452/JTP.vol9no2.13Keywords:
பெரிய புராணம், திருமந்திரம், குரு, லிங்கம், சங்கமம்Abstract
சைவ பெருவெளியில் பன்னிரெண்டு சைவ தோத்திர நூல்களும் 14 சாத்திர நூல்களும் சைவர்களுக்கு இருவிழி போன்றதாகும். 12 தோத்திர நூல்களில் பெரிய புராணம் 12-வது திருமுறையாகவும், 63 சைவ நாயன்மார்களின் வரலாற்றுத் தொகுப்பு நூலாகவும் போற்றப்படுகிறது. அருண்மொழித் தேவர் எனும் இயற்பெயருடைய தெய்வப் புலவர் சேக்கிழார் என்பவரால் பெரிய புராணம் 12-ஆம் நூற்றாண்டில், இரண்டாம் குலோத்துங்க சோழன் அநபாயனின் ஆட்சியின் கீழ் அரங்கேற்றப்பட்டது. இவ்வாய்வு பெரிய புராணத்தின் 63 நாயன்மார்களின் குரு, லிங்க, சங்கம வழிபாட்டின் சான்றுகளைப் பகரும் திருமந்திரத்தினை ஒட்டியதாகும். நாயன்மார்கள் குரு, லிங்கம், சங்கமம் எனும் மூன்று வழிகளில் இறைவனை தொழுது முக்தி நிலையைக் கண்டவர்கள். குரு வழிபாட்டை பின்பற்றியவர்கள் மொத்தம் 12 நாயன்மார்கள். குரு என்றால் சீடனின் அறியாமை எனும் இருளைப் போக்கி அவர்களை ஆன்மீக படிநிலைகளில் உயர்த்துபவர் ஆவர். சிவலிங்க வடிவத்தைப் பூஜித்தவர்கள் 30 நாயன்மார்கள். சிவலிங்கம் என்பது சிவனின் அருவுருவமாகும். சங்கம வழிபாட்டில் தன்னை ஐக்கியபடுத்தியவர்கள் மொத்தம் 19 நாயன்மார்கள். சங்கமம் என்பது அடியார் திருக்கூட்டம். வரலாற்று அடிப்படையில் குரு, லிங்க, சங்கம வழிபாட்டினை நமக்கு அளித்தவர் தெய்வப் புலவர் சேக்கிழார் என்றாலும் அதன் முக்கியத்துவத்தைக் காலத்தால் முற்பட்ட திருமந்திரத்தில் திருமூலர் அருளிச்செய்துள்ளார். திருமந்திரம் என்பது சைவ திருமுறைகளில் 10–ம் திருமுறையாகும். பெரிய புராணமும் திருமந்திரமும் வெளிவந்த காலங்கள் வெவ்வேறாக இருந்தாலும், திருமந்திரம் குரு, லிங்க, சங்கம வழிபாட்டினை பெரிதும் வழிமொழிந்துள்ளது. இந்தக் கட்டுரை குரு, லிங்க, சங்கம வழிபாட்டின் முக்கியத்துவத்தைச் செய்யுள் வடிவில் வழங்கிய திருமூலரின் திருமந்திரத்தில் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதனை உணர்ந்து அறிவதே ஆகும்.